NANBAN Critics

பெரிய பொறியியல் கல்லூரில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் படிக்கிறார்கள். அதிக மார்க் வாங்கினால் நல்ல வேலை என்ற அடிப்படையில் மாணவர்களை வழிநடுத்துகிறார் அந்த கல்லூரியின் முதல்வர் சத்யராஜ். ஆனால் இந்த கல்வி முறையை வெறுக்கிறார் விஜய். இது தவறான முறை என்று நிரூபித்தும் காட்டுகிறார். இதனால் ஒரு மாணவனிடம் தோற்றுப்போகும் சத்யராஜ், விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரை பழி வாங்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த கல்வி முறையின் தவறை சத்யராஜை புரிந்து கொள்ள வைக்கிறார் விஜய்.

இதுதான் நண்பன் படத்தின் கதை.


பத்து வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் தங்களுடன் படித்த நண்பன் விஜய்யை தேடி ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன் ஆகியோர் செல்வது போன்று படம் ஆரம்பிக்கிறது. அவர் என்ன ஆனார். ஏன் காணாமல் போனார் என்பதை தேடி புறப்படுகிறார்கள். அப்போது பத்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ப்ளாஷ்பேக்காக சொல்கிறார் இயக்குனர். சத்யராஜீடன் மோதல், அவர் மகள் இலியானா- விஜய் காதல், காமெடி நடிகர் சத்யனுடன் படிப்பு போட்டி என்று படம் காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது.

ஹீரோயிசம் என்பதை தாண்டி டைரக்டர் ஷங்கர் படம் என்ற வகையில் விஜய், ஸ்ரீகாந்த, ஜீவா, சத்யராஜ் , எஸ்.ஜே.சூர்யா என்று அனைவருமே அந்தந்த கேரக்டர்களாகவே மாறி நடித்திருக்கிறார்கள். அதனால் பல ஹீரோக்கள் நடித்திருந்தும் ஹீரோயிசம் என்பது தலைதூக்காமல் ஒரு டைரக்டர் படமாக உருவாகியிருக்கிறது நண்பன்.

வழக்கமான விஜய் படங்களில் ஒரு ஹீரோயிசம் இருக்கும். நாலு பைட் இருக்கும், நாலு பஞ்ச் இருக்கும. இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. ஒரு கேரக்டராக வந்து செல்கிறார் விஜய்.

ஸ்ரீகாந்தும், ஜீவாவும் நண்பர்கள் என்றாலும், அவர்களது குடும்ப சூழல் மற்றும், அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளையும் சுட்டிக்காட்டி அவர்களை யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் சத்யன் படம் முழுக்க பின்னி எடுத்திருக்கிறார். முன்னணி காமெடி நடிகராக அவரை இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் அங்கீகரித்து விடுவார்கள்.

இலியானா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அழகிலும் சரி, நடிப்பிலும் சரி, பெரிதாக மனதில் ஒட்டவில்லை. அதனால்தானோ என்னவோ அவரை பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அஸ்குலஸ்கு பாடல் மட்டும் இனிமையாக இருக்கிறது. மற்றபடி எந்த பாடலும் முணுமுணுக்கும் அளவுக்கு இல்லை. மேலும், விஜய் பிரசவம் பார்க்கும் காட்சி நம்பத்தகுந்ததாக இல்லை. படம் பார்ப்பவர்களை நெளிய வைக்கும் அளவுக்கு இருக்கிறது. அதோடு கதைக்கு அத்தனை அவசியமான காட்சியாகவும் அது தெரியவில்லை. இப்படி காட்சிகளில் சில குறைகள் இருந்தாலும் ரீமேக் என்பதை சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் ஷங்கர். அதேசமயம் ஒரிஜினல் படத்தை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்களை செய்திருந்தால் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்தாக அமைந்திருக்கும்.

அதற்காக ஒரு படைப்பாளியாய் ஷங்கரை குறைகூற முடியாது. ரீமேக் என்றாலும் ஒரு நல்ல கதைக்கருவை தேர்வு செய்திருப்பதே அவரது திறமை. அதையும் காட்சி அமைப்புகளுடன் நேர்த்தியாகவே செய்திருக்கிறார். பாடத்திட்டம் என்பது இளைஞர்கள் எதிர்காலம். அது எப்படி இருந்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆணித்திறமாக அடித்து சொல்லியிருப்பது ஷங்கரின் தனிச்சிறப்பு.


Share this video :
 
Support : Copyright © Prabhanjam Media - All Rights Reserved
Proudly powered by Blogger